Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, October 20, 2016

வீட்டு பட்ஜெட் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்?

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி :

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது.

ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு. 'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை பாட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை. எனவே, 21-ம் தேதிக்குப்பின் யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது?

நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

வீட்டு பட்ஜெட் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்
வீட்டு பட்ஜெட் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்
1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.

2. சம்பளம் வந்ததும் அத்தியாவசி யமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய வுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும்.

ரிசர்வ் ஃபண்ட்தான் இருக்கிறதே என்று நினைத்து 20 தேதிக்குள் தாம்தூம் என்று செலவழிக்கக் கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், அதை அந்தக் கணக்கிலேயே அப்படியே வைத்துவிடலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பணத்தை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.

5. எப்போதுமே குறைந்த அளவில் கடனை வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்க உதவும் கடன்கள் தவிர்த்து, பிற கடன்கள் அனைத்துமே தேவை இல்லாத கடன்கள்தான். இதைத் தவிர்த்து, வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் அனைத்துமே அதிகமான வட்டி விகிதத்தில்தான் கிடைக்கிறது. இந்தமாதிரியான கடன்களை வாங்கும்போது அதிகமான வட்டியைச் செலுத்தவேண்டியிருக்கும். இதனாலும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு மாத கடைசியில் பிரச்னை உண்டாகும்.

6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத்  தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு  வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.

8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.

கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment