Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Wednesday, October 5, 2016

திருமலை திருப்பதி ஏழுமலையான் சீனிவாச பெருமாளின் தரிசன வழிமுறை

திருமலை திருப்பதியில் இறைவன் சிலை வடிவமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.

நமது பாரத தேசத்தில் உள்ள எட்டு சுயம்பு மூர்த்த திருத்தலங்களில் ‘வேங்கடாத்ரி’ எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்றாகும். இங்கு இறைவன் சிலை வடிவமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார். 

‘திருப்பதிக்கு இணையான க்ஷேத்திரம் வேறொன்று இல்லை..’ என்பது பிரபல சொல்வழக்காக இருந்து வருகிறது. பொதுவாக, திருமலை செல்பவர்கள் சென்றவுடன், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் சாஸ்திர சம்மதமானதாக கருதப்படவில்லை.

திருமலை திருப்பதி ஏழுமலையான் சீனிவாச பெருமாளின்  தரிசன வழிமுறை
திருமலை திருப்பதி ஏழுமலையான் சீனிவாச பெருமாளின்  தரிசன வழிமுறை

அதற்காக ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றை பற்றிய குறிப்பை இங்கே காணலாம்.

1. முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.

2. அதன் பிறகு, அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்.

3. அதன் பிறகு, திருமலையின் மீது ஏறிய பிறகு ‘வராக தீர்த்த கரையில்’ கோவில் கொண்டிருக்கும் ‘வராக மூர்த்தியை’ தரிசித்து வணங்க வேண்டும்.

4. அதற்கு பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும், ஏழுமலை வாசனை, கோவிந்தனை, திருவேங்கடவனை பூஜிக்க வேண்டும்... உளமாற சேவிக்க வேண்டும்..

மேற்கண்ட வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு, அதன் பிறகு வந்த அனைத்து ஆச்சார்யர்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம் ஆகும். 

எளிமையை விரும்பி ஏற்பவன் ஏழுமலையான் என்பதை நினைவு கூறும் விஷயங்களை கீழே பார்க்கலாம்.

திருமலை மடைப்பள்ளியில் சுவாமிக்கு நிவேதனம் தயாராவதை சீனிவாச பெருமாளின் தாயாரான வகுளவல்லி மேற்பார்வை செய்வதாக ஐதிகம். 

வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, கேசரி பாத், சர்க்கராபாத், ஜீராபாயசம், மோளா, ஹோரா, கதம்பசாதம், பகாளாபாத், பருப்பு வடை, பானகம், அப்பம், ஜிலேபி, மனோகரம், ஹோலிபூ, தேன்குழல், கயாபடி, வட்டபடி, மாவுதோசை, நெய்தோசை, வெல்லதோசை, லட்டு ஆகிய நிவேதனங்கள் தயாராகின்றன. 

மேலும், சித்ரான்னம், வடை, முறுக்கு, அதிரசம், போளி, மெளகாரம், பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவையும் பெரிய அளவில் தினமும் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. சிறப்பு நிவேதனமான லட்டு உலகப்புகழ் பெற்று விளங்குவது யாவரும் அறிந்ததே. 

பல்வேறு வகையான பட்சணங்கள், திருமலையின் பெரிய மடைப்பள்ளியில் தயார் செய்யப்பட்டு அவனது அடியார்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

ஆனால், திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுவது வெறும் தயிர் சாதம் மட்டும்தான் அதுவும் மண் பாத்திரத்தில் வைக்கப்பட்டதாக இருக்கும். புத்தம்புதிய மண் பாத்திரத்தில் வைத்து எடுத்து செல்லும் தயிர் சாதம் மட்டும் குலசேகர ஆழ்வார் படியை தாண்டி திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. 

திருமலையானுக்கு ஒவ்வொரு நாளும் புதிய மண் சட்டியில் பிரசாதம் நிவேதிக்கப்படுகிறது. தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்னுள்ள குலசேகரப்படியை தாண்டி செல்வதில்லை. அவனுக்கு படைக்கப்பட்ட தயிர் சாதம் மற்றும் மண் சட்டி ஆகியவற்றை பிரசாதமாக பெறுவது சாதாரணமான விஷயமல்ல. அவ்வாறு கிடைப்பது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்களால் கருதப்படுகிறது.