Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label வளர்ந்த. Show all posts
Showing posts with label வளர்ந்த. Show all posts

Friday, August 5, 2016

இயற்கையான முறையில் வளர்ந்த ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

இயற்கையான முறையில் வளர்ந்தது என்றால், அனைத்து காயோ, கனியோ ஒரே மாதிரி, ஒரே அளவில் இருக்காது. நிறம், வடிவம், அமைப்பு போன்றவை மாறி இருக்கத்தான் செய்யும். இதை வைத்து ஆர்கானிக் என்று கண்டுபிடிக்கலாம். பருப்புகள் கூட ஒரே நிறத்தில் இல்லாமல், ஒரு பருப்பு அடர் நிறத்திலோ, இன்னொரு பருப்பு சற்று மங்கியோதான் இருக்க வேண்டும். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

இயற்கையான முறையில் வளர்ந்த ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி
இயற்கையான முறையில் வளர்ந்த ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி
ஆர்கானிக் பொருட்களை எப்படி வாங்கலாம்?  

தெருவுக்கு தெரு ஆர்கானிக் கடைகள், ஆனால் அது உண்மையில் ஆர்கானிக் கடைதானா என்பதில் பலருக்கும் சந்தேகம். விலையும் அதிகமாக இருக்கிறது. அதற்கு  மார்கெட்டிலேயே வாங்கி விடலாம், என்றே பலரது முடிவும் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களுக்கும் ஆர்கானிக் உணவுகளை வாங்குவதில், பல  சந்தேகங்கள் இருக்கின்றன.

*பெரிய அளவு பழமோ, காயோ, கிழங்கு வகைகளோ அவற்றை தவிர்த்து, சிறிய அல்லது மீடியம் அளவு உணவுகளையே வாங்குங்கள்.

*ஆப்பிள், மாம்பழம், திராட்சையில் அதிகப்படியான பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன என்பதால், இவற்றை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துங்கள். நேர்த்தியான, அழகான கனிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.

*சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.

*ஆர்கானிக் காய்கறிகளாக இருந்தால் அவை சீக்கிரம் வெந்து விடும். நேரம் அதிகமாக தேவைப்படாது.

* புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றில் அவற்றுக்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வர வேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது. அதிக ஃபிரெஷ் எனில் சற்று சந்தேகப்படலாம்.

* தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.

*ஒன்றிரண்டு பூச்சிகள், வண்டுகள் இருந்தால் அந்த கீரையையோ, காய் கனிகளையோ தேர்ந்தெடுப்பது நல்லது. பூச்சிக்கொல்லி அடிக்காத உணவுப்பொருட்கள் என கண்டுபிடித்து விடலாம். பூச்சி முழுவதும் பரவி, அழுகி இருப்பதை தவிர்க்க வேண்டும்.

*ஒரு ஆர்கானிக் கடையில், இரண்டு பொருட்கள் மட்டும் வாங்கி சமைத்து பாருங்கள். சுவையை அறிந்து கொள்ளுங்கள். அது போல, மற்ற கடையில் உள்ள பொருட்களை வாங்கி சுவைத்துப் பாருங்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும். அதன் பிறகு உங்களின் ஷாப்பிங், இனிமேல் எங்கே என்பதை முடிவு செய்யலாம்.

*சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.

*கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பாரிலோ, கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்து போகாது.

*அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது  எனக் கேட்டால், தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

*பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.

*அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களிலும் கிடைக்கும்.