மேஷ ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சிக்கு என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மேஷராசிக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவான் ஆறாமிடத்திற்கு வருகிறார். கடந்த ஒரு வருடகாலமாக அவர் சிறப்பான இடமாக சொல்லப்படும் ஐந்தாமிடத்தில் இருந்தார். ஐந்தில் இருந்த குருபகவானால் நீங்கள் சென்ற வருடம் அதிக நன்மைகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால் மேஷத்தினரைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு சென்ற வருடத்தில் நல்லபலன்கள் நடைபெறவில்லை.
![]() |
மேஷ ராசிக்காரர்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் |
கோட்சாரரீதியில் இன்னொரு முக்கியகிரகமான சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் அஷ்டமச்சனியாக அமர்ந்து உங்களுக்கு நடக்க இருக்கும் நற்பலன்களை தடுத்து கொண்டிருக்கிறார். ஒருவருக்கு ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடக்கும் காலங்களில் மற்ற கிரகங்கள் நன்மைகளைத் தரும் அமைப்பில் இருந்தாலும் கூட நல்லபலன்கள் நடக்காது. இதற்கு குருபகவானும் விதிவிலக்கு அல்ல.
எனவே ஐந்தாமிடத்தில் இருந்த குருபகவான் உங்களுக்கு நன்மைகளைத் தர இயலாது போனதைப் போல தற்போது ஆறாமிடத்திற்கு வரும் குருபகவானால் உங்களுக்கு தீமைகளையும் தர இயலாது. எனவே சனிபகவானுக்கு முதலிடம் கொடுத்து அவருக்குரிய பரிகாரங்களையும், அடுத்து குருபகவானுக்குரிய பரிகாரங்களையும் மேஷராசிக்காரர்கள் செய்து கொள்வது நல்லது.
மேஷத்தினர் அஷ்டமச்சனியின் தாக்கத்தினைக் குறைத்து சனியின் கெடுபலன்களில் இருந்து காத்துக்கொள்ள அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் அருள்பாலிக்கும் சிவனின் அம்சமான காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. இதற்கு நிகரான இன்னொரு பரிகாரமாக பழமையான பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் ராமபக்தனான ஸ்ரீஅனுமனின் பாதம் பணிந்து நெய்தீபம் ஏற்றுவதும் சனியின் ஆதிக்கத்தில் இருந்து உங்களை விடுவிக்கும்.
மேற்கண்ட இருவர்களில் காலபைரவர் சனியின் குருநாதர் என்பதால் குருவை மீறி சிஷ்யன் ஒன்றும் செய்ய முடியாது என்ற அடிப்படையிலும் இன்னொருவர் சனியால் வெல்ல முடியாத ஸ்ரீஅனுமன் என்பதாலும் இந்த பரிகாரத்தைச் செய்ய ஞானிகள் சொன்னார்கள் இவர்கள் இருவரையும் வழிபடும்போது “அய்யனே... உங்கள் நிழலில் ஒண்டிக் கொண்டு உங்களைச் சரணடைகிறேன். உங்களை சனிபகவானால் ஒன்றும் செய்ய முடியாததைப் போல என்னையும் சனியின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றுங்கள்.” என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அஷ்டமச்சனியின் கெடுபலன்களில் இருந்து தப்பிக்க முடியும்.
குருவுக்கான பரிகாரமாக ஏதேனும் ஒரு மாதத்தில் வரும் உங்களுடைய ஜென்ம நட்சத்திரமன்று கும்பகோணத்திற்கு அருகில் உள்ள குருவிற்கான முதன்மை ஸ்தலமான ஆலங்குடிக்கு சென்று வழிபடலாம். தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செந்திலாண்டவன் சூரபத்மனை முறியடித்த வெற்றிஸ்தலமான அலைகள் சீராட்டும் திருச்செந்தூருக்கு ஏதேனும் ஒரு செவ்வாய் அல்லது வியாழக்கிழமையில் சென்று வழிபடலாம்.
No comments:
Post a Comment