திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
மேஷ இராசி அன்பர்களே :
26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி விட்டீர்கள். இப்பொழுது சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பிரமாதமாக வாரி வழங்க போகிறார். இதுநாள்வரைபட்ட கஷ்டங்கள் பறந்து ஓடி விடும். 10,11-க்குரிய சனி பகவான், 9-ல் இருப்பதால் உத்தியோகம், தொழில் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும். வழக்கில் வெற்றி தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இத்தனை நாள் இருந்த அலைச்சல் தீரும். இனி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை உயர்ந்து நிற்க்கும். 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி தொழில் அமோகமாக இருக்கும். 6-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும். ஓரளவு கடன் தொல்லை அகலும். அதேநேரம் புதிய கடன் வாங்கச் செய்யும். ஆகவே கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து வாரி வழங்கும்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:
உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் வழங்கி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள்.
ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
ரிஷப இராசி அன்பர்களே :
26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு இது அஷ்டம சனி.அய்யோ சனி 8-ம் இடத்திற்கு வந்து விட்டதே? என்று பயப்பட வேண்டாம். ரிஷப இராசிக்கு சனி யோககாரகன். அஷ்டம சனியாக வந்தாலும் நிச்சயம் கெடுக்க மாட்டான். ரிஷப இராசிக்கு சனி தர்ம-கர்மாதிபதி. அவன் 2-ம் இடத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குழப்பங்கள் தீரும். திருமணம் தடைபட்டு இருந்தால் இனி வீட்டில் மேள சத்தம்தான். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும். தெய்வஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக பிடித்து வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8-ம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7-ம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:
சனிக்கிழமையில் சனிபகவான் சந்நதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்
மிதுன இராசி அன்பர்களே :
26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரையில் 6-ம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்போது 7-ம் இடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இராசிக்கு 9-க்குரிய சனி, 7-ல் வந்திருப்பது நன்மையே தரும். பொதுவாக பாக்கியாதிபதி, சப்தமஸ்தானத்திற்கு வந்தால் எப்பேர்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு. உயர்கல்வி அமையும். அடமானத்தில் இருந்த பொருட்கள் கைக்கு வந்து விடும். புதிய வாகனம் வாங்கக்கூடிய சாதகமான நேரம் இது. ஆனாலும், ஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று டென்ஷனும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:
சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
**************
சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 - மேஷம் இராசி முதல் மீனம் இராசி வரை பொதுப் பலன்கள் & பரிகாரங்களும் விரிவாக பார்க்க வாருங்கள் : சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017
**************
சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 - மேஷம் இராசி முதல் மீனம் இராசி வரை பொதுப் பலன்கள் & பரிகாரங்களும் விரிவாக பார்க்க வாருங்கள் : சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017
No comments:
Post a Comment