அணையா விளக்குடன் ஜெயலலிதா சமாதியில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி திறக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சமாதி :
மறைந்த தமிழக முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்.சமாதிக்கு பின்புறம் சுமார் 40 அடி தொலைவில் ஜெயலலிதாவின் சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதியை சுற்றி தற்காலிக இரும்பு தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த இடத்தில் கிரானைட் கற்களை கொண்டு சமாதி கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டன.
ஜெயலலிதா சமாதியில் அணையா விளக்குடன் நினைவிடம் அமைக்கப்படுகிறது |
சமாதி கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அளவு எடுத்தனர். வெகுவிரைவில் ஜெயலலிதாவின் சமாதி கட்டி முடிக்கப்படும் என்று தெரிகிறது. சமாதி அமைக்கப்படும் கற்களில் ஜெயலலிதா பிறந்த தேதி மற்றும் மறைந்த நாள் இடம் பெறும். அவருடைய தாரக மந்திரமான, ‘மக்களால் நான். மக்களுக்காகவே நான்’ என்ற வாசகமும் பொறிக்கப்பட உள்ளது.
அதிகாரி தகவல் :
ஜெயலலிதாவின் சமாதி கட்டும் பணி முடிவடைந்தவுடன், அவரது அடைமொழியான ‘அம்மா’ பெயரில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடத்தில் இருப்பது போன்று அணையா விளக்குடன் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. 3 மாதிரி வரைப்படங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடலோர பாதுகாப்பு குழுமம் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். நினைவிடத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலையும் அமைக்கப்படும். அவருடைய வாழ்க்கை குறிப்பு, சாதனை திட்டங்களும் கல்வெட்டில் பொறிக்கப்படும். நினைவு தூணும் நிறுவப்படும்.
ஜெயலலிதா பிறந்தநாளில் திறக்க தமிழக அரசு திட்டம் :
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி அன்று நினைவிடத்தை திறக்கும் வகையில் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். தற்போது ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment