Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Monday, May 18, 2015

உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா?

கோடை வெயில் சுட்டெரிப்பது ஒரு புறம் என்றால், அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றொரு புறம் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும், மின் சிக்கனத்தை கடைப்பிடித்தால், ஆண்டுதோறும் இப்படி புலம்ப வேண்டியதில்லை.

எதற்கெடுத்தாலும் அரசை குற்றம் சொல்லிக் கொண்டே இருக்காமல், நம்மால் முடிந்ததை செய்தாலே, பாதி பிரச்னை தீர்ந்து விடும்.
மின் வெட்டு பிரச்னைக்கு முக்கிய காரணம், மின் பயன்பாடு அதிகரித்திருப்பது தான். முன்பெல்லாம், பணக்காரர்கள் வீட்டில் தான், 'ஏசி'யும், குளிர்சாதனப் பெட்டியும் இருக்கும். இப்போது, பெரும்பாலான வீடுகளில் உள்ளன. விளைவு, மின்சார பயன்பாடு அதிகரித்து விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் செலுத்திய மின் கட்டணத்துக்கும், இப்போது செலுத்தும் கட்டணத்துக்கும், பெரிய அளவில் வேறுபாடு இருக்கும். கட்டணம் அதிகரித்து விட்டது என்று சொன்னால் அது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். நாம், மின் பயன்பாட்டை அதிகரித்து விட்டோம் என்பது தான் உண்மை. அதற்காக, இவையெல்லாம் இல்லாமல், வாழ முடியுமா என்ற கேள்வி எழும். முடியாது தான். அதேசமயம், நம் வீட்டின் மின்நுகர்வையும் குறைக்க வேண்டும். அதற்கு, சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்.

பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதன பெட்டிகளை, மெகா சைஸ் குப்பைத் தொட்டியாகத் தான் பயன்படுத்துகின்றனர். கெட்டுப் போகும் பொருட்களை, ஓரிரு நாட்கள் வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் அது. ஆனால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு தயிர், பால், குளிர்பானம் மற்றும் இட்லி மாவு என வைப்பதுடன், காய்கறிகள், சாக்லெட், மருந்து, பூ என எல்லாமே குளிர்சாதன பெட்டியை ஆக்கிரமித்துள்ளது. சட்னியும், இட்லி மாவும் தவிர்க்க முடியாதது. காய்கறி மற்றும் பாலை அன்றாடம் வாங்குவது நல்லது.
தயிரை தினமும் உறை ஊற்றலாம். வாரத்தில் ஒரு நாள், பிரிஜ்ஜை சுத்தம் செய்யுங்கள். குறிப்பாக, பிரீசரில் உள்ள ஐஸ், முற்றிலும் கரைக்கப்பட வேண்டும். அடுத்து, பொருட்கள் வைக்கும் போது, பிரிஜ்க்கு என உருவாக்கப்பட்ட டப்பாக்களில் வையுங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் மெட்டல் பாக்ஸ்களில் வைக்க வேண்டாம். இதன் மூலம், 10 சதவீதம் பிரிஜ்ஜின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. அதேபோன்று குளிர் குடிநீருக்கு மண்பானை வாங்குங்கள்.

உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா


அடுத்தது, 'ஏசி!' இதன் பில்டர்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில், கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அதிலுள்ள பேனிலும், தூசி அதிகம் படிந்து இருக்கும். குறிப்பாக, குளிர்காலத்தில் பயன்பாடின்றி வைத்து விட்டு, வெயில் துவங்கியதும், 'ஏசி'யை இயக்கும் போது, அதன் செயல்பாடுகளில், 40 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. இதனால், கோடை துவங்கும் முன், 'ஏசி' மெக்கானிக்கை வரவழைத்து, சுத்தம் செய்வது அவசியம்.
அடுத்து, மின் விளக்குகள்! சி.எப்.எல்., அல்லது அதை விட குறைந்த மின்சாரம் பயன்படுத்தக்கூடிய, எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்தலாம். இதனால், டியூப் லைட்டுக்கு பயன்படுத்திய மின்சாரத்தில், நான்கில் ஒரு பங்கு தான் செலவாகும்.

அதேபோன்று, பழைய பிக்சர் டியூப், 'டிவி'க்கள், மின்சாரம் அதிகம் எடுக்கக்கூடியவை. எல்.இ.டி,, மற்றும் எல்.சி.டி., 'டிவி'கள் என்றால், பாதி மின்சாரம் மட்டுமே பயன்படும்.

இதையெல்லாம் செய்தாலும், நம் வீட்டில் எவ்வளவு மின்சாரம் சேமித்து விட முடியும் என்ற அவநம்பிக்கை எழுகிறதா?
முதல் நாள் மாலை, 5:00 மணிக்கு, உங்கள் வீட்டு மின்சார மீட்டரின் ரீடிங்கை குறித்துக் கொள்ளுங்கள். அதன்பின், வீட்டில் எந்தெந்த விளக்கை எப்போது போடுகிறோம், அணைக்கிறோம் என்பதை குறிக்கத் துவங்குங்கள். மறுநாள் மாலை, 5:00 மணி வரை, எவ்வளவு யூனிட் வந்துள்ளது என, குறித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, பிரிஜ்ஜில் உள்ள தேவையற்ற பொருட்களை வெளியில் எடுத்து, சுத்தம் செய்யுங்கள். 'ஏசி'யையும் சுத்தம் செய்யுங்கள். டியூப் லைட் இருக்கும் அறைகளில் எல்லாம், எல்.இ.டி., விளக்குகளை பொருத்துங்கள்.
அதன்பின், மாலை, 5:00 மணிக்கு, மீண்டும் ரீடிங்கை குறித்துக் கொள்ளுங்கள். முன்பு செய்தது போலவே, எந்தெந்த விளக்குகளை எப்போது ஆன் செய்கிறோம், ஆப் செய்கிறோம் என மீண்டும் குறியுங்கள். மறுநாள் மாலை, 5:00 மணிக்கு ரீடிங்கை பாருங்கள். 20 முதல் 30 சதவீத மின் நுகர்வு குறைந்திருக்கும்.

ஒரு நாளில் இந்த அளவு எனும் போது, கட்டணத்தில் எவ்வளவு குறையும் என நினைத்துப் பாருங்கள். நம் வீட்டுக் கட்டணம் குறைவது மட்டுமின்றி, நாட்டுக்கும் நம்மால் நல்லது நடப்பதை உணருங்கள்.
நினைவில் கொள்ளுங்கள்... ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பது, இரண்டு யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கு சமம்.

மேலும் விவரங்கள் முழுமையான அறிய http://www.velloreinformation.in or 
http://bit.ly/1AfsIlJ என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment