Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Tuesday, September 27, 2016

முன்னேற்றம் தரும் முப்பெரும் தேவியர் - நவராத்திரி வழிபாடு :

முன்னேற்றம் தரும் முப்பெரும் தேவியரை நவராத்திரி அன்று வழிபாடு செய்ய வேண்டும்.

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையான ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாகும். இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியோரை வழிபட வேண்டும். 

முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது. 

வளம் தரும் 9 நாள் நவராத்திரி விரத வழிபாடு

வளம் தரும் 9 நாள் நவராத்திரி விரத வழிபாடு : 

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும்.

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும்.

முதல் நாள் : 

சக்தியை, முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல் வழிப்படுத்தவே ஆகும். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.

இரண்டாம் நாள் : 

அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துப்பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்துப்பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம். தயிர் சாதம் நிவேதனம் சிறந்தது.

மூன்றாம் நாள் :

சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரி பாலனம் செய்பவளும் இவளே ஆகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும். மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள். வெண் பொங்கலை நைவேத்தியம் செய்யலாம்.

நான்காம் நாள் : 

சக்தித் தாயை, வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும். எலுமிச்சை சாதத்தை அன்னைக்கு நைவேத்தியமாக படைப்பது நலம் தரும்.

ஐந்தாம் நாள் :

அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும். புளியோதரை நிவேதனம் சிறந்தது.

ஆறாவது நாள் :

அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள். தேங்காய் சாதம் படைத்து வழிபட வேண்டும்.

ஏழாம் நாள்  : 

அன்று மகா லட்சுமியாக கருதி வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங் களும் வந்து சேரும். கல்கண்டு சாதத்தை நிவேதனம் செய்யுங்கள்.

எட்டாம் நாள் : 

அன்று அன்னையை, நரசிம்கி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.

ஒன்பதாம் நாள் : 

அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூப மானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும். நைவேத்தியமாக அக்கார வடிசலை படைக்கலாம்.