ஜோதிடத்தில் பொதுவாக குருவும் சுக்கிரனும் சுப கிரகங்களாக கூறப்படுகிறார்கள். வசதி வாய்ப்புடன் வாழ்பவர்களை பார்த்து சுக்கிர தசை அடிக்கிறது என்பார்கள். சுக்கிரன் தனி மனித செல்வத்திற்க்கு காரகர் குரு பொது செல்வத்திற்க்கு காரகர் எனவே குரு பெயர்ச்சி எல்லோராலும் எதிர்பார்க்கும் தன்மையுடையதாகிறது. குரு பகவான் கொடுக்கும் பலன்களைத் தெரிந்து கொள்வோம்
குரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்து இவரது திசை இளமையில் வந்தால் கல்வியில் முதன்மை நிலை உண்டாகும். நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் ஏற்படும். இறுதிப்பகுதியில் வந்தால் சந்ததிகள் செழிப்பார்கள். கோசாரத்தில் குரு இருக்கும் ஸ்தானத்திற்கு ஐந்தில் சூரியன் வரும் பொழுது வக்கிர கதி ஏற்படும். ஒன்பதில் வரும் பொழுது வக்ர நிவர்த்தி ஏற்படும். ஜாதகர் பிறக்கும் பொழுது குரு வக்கிரத்தில் இருந்தால் குரு வக்கிரம் அடையும் பொழுது அதிக நன்மைகளை ஏற்படும். பொதுவாக குரு இருக்கும் இடம் கெட்டுப்போகும், பார்க்கும் இடங்கள் பலம் பெறும். சனி இருக்கும் இடம் பலம் பெறும், பார்க்கும் இடம் கெடும்.
பொதுவாக ஜனன லக்கினம், சந்திரன் இருக்கும் ராசி, ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்தில் இருந்து 2-5-7-9-11 ஆகிய இடங்களில் கோசாரத்தில் குரு வந்தால் யோகம் தரும். பிற ஸ்தானங்களான 1-3-4-6-8-10-12 ஆகிய ஸ்தானங்களில் குரு வரும் போது தீய பலனைத் தருவார் என்பது நூல்களின் கருத்து. குரு பார்வை படும் ஸ்தானங்கள் பலம் பெரும். குரு தான் இருக்கும் ஸ்தானங்களிலிருந்து ஐந்து,ஏழு மற்றும் ஒன்பது ஆகிய ஸ்தானங்களைப் பார்வையிடுவார்.
குரு சிம்மத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக தனுசு ராசியையும் ஏழாம் பார்வையாக கும்பம் ராசியையும் ஒன்பதாம் பார்வையாக மேஷம் ராசியையும் பார்வையிடுகிறார்.
நல்ல பலன் அடையும் ராசிகள் மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் தீய பலன் அடையும் ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் குரு தரும்.
மேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் அறிந்து கொள்வோம் :
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே உங்களின் தலையாய நோக்கமாகும். வீரமும் தைரியமும் கோபமும் ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளவர்கள் நீங்கள். கடந்த காலத்தில் மேஷம் ராசிக்கு நான்காம் இடத்தில் கடகத்தில் இருந்த குரு அவ்வளவு நல்ல பலன்களை செய்ய விட்டாலும் அஷ்டம சனியால் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றினார். இப்போது ஐந்தாம் இடமான சிம்ம ராசியில் பெயர்ச்சியாகி வருவது நல்ல பலன்களைத் தரும் ஸ்தானமாகும்.
ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியம், குல தெய்வம், குழந்தைகள், மகிழ்ச்சி, திட்டமிடுதல், கற்பனை, கலைகளில் நாட்டம், குரு உபதேசம், பக்தி, ஆகியவற்றை குறிக்கும் ஸ்தானம் ஆகும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் புத்திரகாரகனும், தனகாரகனுமான குரு அமர்வது அதிர்ஷ்டத்தைத் தரும். மக்கள் பேறு, மகிழ்ச்சி, உண்மையான நண்பர்கள், விசுவாசமான வேலையாட்கள், சகல விதமான செல்வ பாக்கியம், குலதெய்வ வழிபாடு பூஜை, தாய்மாமன் ஆதரவு, பரம்பரை சொத்துகள் கிடைத்தல், புதிய சொத்துகள் வாங்கக் கூடிய வாய்ப்புகளும், நீண்டகால கனவுகள் யாவும் நிறைவேறும், புதிய திட்டங்களும், ஆசைகளும் நிறைவேறும்.
மேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் அறிந்து கொள்வோம் |
திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு வாரிசு உண்டாகும். திருமண வயதில் திருமணத்திற்க்காக காத்திருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண யோகம் கைகூடி வரும். குடும்பத்தில் சுபமான மங்கள காரியங்கள் நடைபெறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்றவாறு கௌரவமான வேலையும், பதவியில் இருப்போர்க்கு பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்க்கு பதவி உயர்வுடன் இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கலாம். வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகங்கள் பயணங்கள் அனுகூலம், ஆதாயம் தரும். உங்கள் ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் உங்கள் புகழ், அந்தஸ்து, கௌரவம். மதிப்பு, மரியாதை, உற்றார், உறவினர், நண்பர்கள் மத்தியில் உயரும்.
உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தை குரு பார்ப்பதால் தெய்வ அனுகூலம் காரியசித்தி, பூர்வீக சொத்துகள் ஆகியவற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம் இப்பொழுது கண் திறந்து கருணைமழை பொழியும். உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தை குரு பார்ப்பதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வழக்கு ஏதேனும் இருந்தால் வெற்றி கிட்டும். திருமணமான பெண்கள் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு புகுந்த வீட்டில் இதுவரை அடைந்த மனக் கஷ்டங்கள், மாமியார், நாத்தனார்களினால் தொல்லை அனுபவிக்கும் பெண்களுக்கு எல்லாம் இந்த குரு பெயர்ச்சி ஆறுதலை தரும்.
அஷ்டமத்து சனி நடப்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமாக செயல்பட வேண்டும். கோர்ட் வம்பு தும்பு வழக்கு தேடி வரலாம். எல்லா செயலையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. பணம், காசு கொடுக்கல் வாங்கல், அடுத்தவருக்கு ஜாமீன் போடுவது கூடாது. திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இறங்கும் பொழுது திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஜாதகம், தசாபுத்தி ஆகியவற்றை நன்கு பார்த்து திருமண முயற்சி செய்ய வேண்டும்.
குரு பெயர்ச்சி யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுத்தாலும் அஷ்டமத்து சனி அலைச்சல், மன உளைச்சல், சங்கடங்களை கொடுத்து காரிய வெற்றியை கொடுக்கும்.
பொதுவாக இந்த குரு பெயர்ச்சியினால் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment