பல நல்ல மாமனிதர்களை பெற்று பெருமை கொண்டது தான் நம் தேசம் அந்த வகையில் தமிழ்த்தாய் ஈன்ற கடைகோடியில் பிறந்த காவியத்தலைவன் தான் A.P.J.அப்துல் கலாம் அவரின் பிறந்த நாள் இன்று.
உலக நாயகனின் உதயம் :
தமிழ்நாட்டின் கடைகோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் சாதரணமான ஏழை மீனவக் குடும்பத்தில் ஜெயினுலாப்தின் - ஆஷியம்மா தம்பதியருக்கு 15.10.1931-ல் பிறந்தவர் தான் அப்துல் கலாம். கலாமின் 86-வது பிறந்த தினம் இந்நாள். அவரின் முழுப் பெயரோ "ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம்" சிறு வயது முதலே பல கஸ்டங்களை கடந்து வந்தவர் தான் கலாம். பேப்பர் போடும் பையனாக இருந்து தன் வாழ்க்கைப் பயணங்களை தொடங்கியுள்ளார்.
தமிழ்த்தாய் ஈன்ற கடைகோடியில் பிறந்த காவியத்தலைவன் தான் A.P.J.அப்துல் கலாம் பிறந்த நாள் |
கலாமின் கல்விப் பருவம் :
இராமநாதபுரம் ஸ்வாட்ஸ் மெட்ரிக் பள்ளியில் படித்தார்.பின் தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியலும் ,1955-ல் சென்னை எம்.ஐ.டி யில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங்கும் பயின்றார்.
இந்தியாவின் குடிமகனாக விளங்கிய கலாம் :
இப்படி தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய கலாம் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தார். 1958-ல் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்த கலாம் 1963-ல் இந்திய விண்வெளித் துறையின் திட்ட அலுவலர் ஆனார். 1998ல் ராஜஸ்தானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை எல்லாம் அதிர வைத்தார்.
அக்னி நாயகனாய் கலாம் :
1960-ல் DRDO விஞ்ஞானியாக தன் பயணத்தை தொடங்கிய கலாம் பிறகு இஸ்ரோ விண்வெளித் துறையில் கால்பதித்து பல ஏவுகணைகளை பறக்க விட்டார்.உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைநிமிர இவரின் பணி இன்றியமையாதது. இந்திய விண்வெளித் துறைக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கனார். அக்னி ஏவுகணையை விண்ணில் செலுத்தி உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த இவர் "ஏவுகணை தந்தை என்றே" அழைக்கப் பட்டார் .பல தொழில் நுட்பத்துக்கு வித்திட்டவராய் திகழ்ந்தவர் கலாம்.
இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் 85வது பிறந்த நாள் இன்று |
இளைஞர்களின் எழுச்சி நாயகனாய் கலாம் :
இந்திய விண்வெளித் துறையோடு தன் பயணத்தை முடிக்காமல் எதிர்கால இந்தியாவின் மன்னர்களாம் இளைஞர்களை "கனவு காணுங்கள் கனவு காணுங்கள்" எனக் கூறி ஒவ்வொரு இந்திய இளைஞரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தவர். ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் இமயமாக இருக்கிறார்.
நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த கலாம் :
பாரத ரத்னா, பத்ம பூசண், பத்ம விபூசண் என எந்த பட்டத்தையும் விட்டுவைக்காத கலாம் நாட்டின் குடியரசு தலைவராகவும் உயர்ந்தார். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002-2006 வரை பணியாற்றினார் . எத்தனையோ பேரை இப்பதவி அலங்கரித்தது ஆனால் இந்த பதவியே அலங்கரிக்கப்பட்டது அப்துல் கலாமால்.நாட்டின் தலைவராக உயர்ந்த போதிலும் தனக்கென எதுவும் சேர்த்து வைக்காமல் நாட்டுக்காகவே வாழ்ந்தார். அவர் சேர்த்து வைத்தது என்னவோ அவரின் புத்தகங்களும்,நம்முடைய அன்பையும்.
கலாமின் நூல்கள் :
இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பதே கலாமின் ஆசையாக இருந்தது அதனால் "இந்தியா 2020" என்ற நூலை எழுதினார். அவரின் வாழ்க்கை காவியமான "அக்னி சிறகுகள்",குறிக்கோள் 3 பில்லியன்,திருப்பு முனைகள், பற்றவைக்கப்பட்ட மனங்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
கனவாக மாறிய கலாம் :
கனவு காணுங்கள் எனக்கூறி கலங்கரை விளக்காய் திகழ்ந்த கலாம் தன்னுடைய விந்தை விளையாட்டை மண்ணுலகில் மட்டும் செய்தால் மட்டும் போதாது விண்ணிலகிலும் செய்ய வேண்டும் என விரைந்து விட்டார்.கடவுளுக்கே கலாமை சீக்கிரமாக காண வேண்டும் என்ற ஆசை போலும் அதனால் விரைவாக அவர் கலாமை அழைத்துச் சென்றுவிட்டார். 27.07.2015 அன்று மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த கலாம் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் இறந்தார்.அவரின் மரணம் இந்தியாவையே சோகத்தில் மூழ்க்கியது ஒவ்வொரு இந்தியனும் தன் குடும்பத்தில் ஒருவராக கலாமுக்காக துக்கம் செய்தார்கள்.அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தற்போது அவரின் சமாதியில் பிரமாண்டமான வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இன்று கலாம் நம்மிடம் இல்லை என்றாலும் அவர் விதைத்த விதைகளாய் இருக்கிற இளைஞர்கள் ஒவ்வொருவரும் இந்தியா வளர்ந்த வல்லரசு நாடாக மாற உழைக்க வேண்டும் உழைப்போம்.
கலாமின் முக்கிய கோரிக்கைகள் :
1.கிராமம் - நகரம் இடையே இடைவெளி அனைத்தும் அகலப் பட வேண்டும்.
2.குடிநீர்,எரிசக்தி சமனடையப் பட வேண்டும்.
3.விவசாயம்,தொழில் ,சேவை, ஒருங்கிணைந்த முன்னேற்றம்.
4.சமூகம் ,பொருளாதாரம், பண்பாட்டுடன் சிறந்த கல்வி அனைவருக்கும் கிடைத்தல்.
5.விஞ்ஞானம் ,அறிவார்ந்த வல்லமை ,தொழில் முதலீடு ஏற்புடைய நாடாக மாற்ற வேண்டும்.
6.குடிமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி.
7.ஊழலற்ற ,வெளிப்படையான, பொறுப்பான ஆட்சி முறை.
8.எவரும் தனிமைப் படுத்தப்படாமல் வறுமை ஒழிக்கப்பட்டு கல்லாமை இன்றி, பெண்கள், குழந்தைகள் பேணப்படுதல் .
9.அனைத்து வகைகளிலும், ஓர் ஏகோபித்த நாடாக இந்தியா மாற வேண்டும்.
10.சிறந்த தலைமை, வளமான, அருமையான நிலையை இந்திய மக்கள் அனுபவிக்க வேண்டும்.
கலாம் கற்பித்த பொன் மொழிகள் :
சிறந்த மனிதர்களுக்கு மதம் என்பது, நண்பர்களை உருவாக்கும் வழி சிறிய மனிதர்களுக்கு அது சண்டையிடுவதற்கான கருவி.
உங்களது முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வு எடுக்காதீர்கள். ஏனென்றால் இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல நிறைய உதடுகள் காத்துக் கொண்டிருக்கும்.
வானத்தைப் பாருங்கள் நாம் தனித்து இல்லை.இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது.
கனவு காண்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.
பெரிய விசயங்களுக்காக காத்திருக்க கூடாது.கையில் என்ன இருக்கிறதோ அதைக்கொண்டு பயணத்தை தொடங்க வேண்டும்.
No comments:
Post a Comment