அனைவருக்கும் தீபாவளி போனஸ் கிடைத்திருக்கும். இந்தப் பணத்தை கொண்டு பலரும் தங்கத்தை வாங்கி வைப்பார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND) விற்பனையை இன்று (அக்டோபர் 24, 2016) தொடங்கி இருக்கிறது. இந்த பாண்டுகளில் நவம்பர் 2, 2016 வரை முதலீடு செய்யலாம்.
பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்?
வழக்கத்தை விட, தீபாவளிக்காக 10 கிராம் தங்க பாண்டு முதலீட்டுக்கு ரூ.500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமம் கூட வாங்கலாம். அதற்கும் இந்த தள்ளுபடி (கிராமுக்கு ரூ.50) கிடைக்கும்.
தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.
இந்த தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக கொடுக்க மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாக தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த கோல்டு பாண்டு முதலீடு, இதர தங்கத் திட்ட முதலீடுகளை விட ஏன் சிறந்தது என்பதை பார்ப்போம்.
தங்கத்தில் முதலீடு செய்ய ஆபரணம், தங்க நாணயம், கோல்டு இடிஎஃப் (காகித தங்கம்), கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என பல வழிகள் உள்ளன.
1. ஆபரணத்தங்கம் வாங்கும் போது செய்கூலி, சேதாரம் இருக்கும். இது கோல்டு பாண்டில் கிடையாது.
2. ஆபரணத் தங்கம், நாணயம் விற்கும் போது சேதாரம், பழைய நகை என்று விலை குறைக்கப்படும். கோல்டு பாண்டுக்கு அப்போதைய தங்கத்தின் விலை குறையாமல் கிடைக்கும்.
3. கோல்டு இடிஎஃப், கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்ட்களில் நுழைவு கட்டணம், நிர்வாகக் கட்டணம் உண்டு. கோல்டு பாண்டு திட்டத்தில் இந்தக் கட்டணங்கள் எதுவும் கிடையாது.
4. கோல்டு பாண்டில் ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.75% வட்டி கிடைக்கும். ஆபரணம், தங்க நாணயம், கோல்டு இடிஎஃப் (காகித தங்கம்), கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் விலை ஏற்றம் மட்டுமே லாபம்.
5. தங்க முதலீட்டு திட்டங்களில், கோல்டு பாண்டுக்கு மட்டும்தான் மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.
தங்க கடன் பத்திர முதலீடு கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் :
தங்க முதலீடு மூலம் லாபம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND) முதலீடு இருக்கிறது. இதன் ஐந்தாம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, தொடங்கி உள்ளது . இதில் செப்டம்பர் 9 வரை முதலீடு செய்யலாம்.
அதில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான 10 முக்கிய காரணங்களை பார்ப்போம்.
1. இப்போது ஒரு கிராம் மதிப்புள்ள தங்க கடன் பத்திரத்தில் கூட முதலீடு செய்யலாம். ரூ. 3150 (24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை) இருந்தால் முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும். தேவைக்கு ஏற்ப இந்த தங்க கடன் பத்திரங்களை 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பில் வாங்கலாம்.
2. நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) ஒருவர் அதிகபட்சம் 500 கிராம் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
3. இந்தத் தங்க கடன் பத்திரங்களை காகித வடிவில் அல்லது டீமேட் (எலெக்ட்ரானிக்) வடிவில் நமது வாய்ப்பு வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.
4. முதலீட்டு நோக்கில் தங்க நகையாக வாங்கும் போது உள்ள செய்கூலி, சேதாரம் இதில் இல்லை.
5. ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.75% வட்டி வருமானமாக கிடைக்கும். தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.75% வட்டி கிடைக்கும். வட்டி 6 மாதத்துக்கு ஒரு முறை தரப்படும்.
6. தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன என்பதால் முதலீடு செய்வது எளிது.
7. பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இந்த தங்க கடன் பத்திரங்கள் மீது வர்த்தகம் நடப்பதால் பணத் தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள முடியும்.
8. மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.
9. முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.
10. ரூ. 20,000 வரையிலான முதலீட்டுக்கு ரொக்கப் பணமாக செலுத்தலாம். இதற்கு மேல் என்றால் டிடி, செக் கொடுக்கலாம். ஆன்லைன் மூலமும் முதலீடு செய்ய முடியும்.
இந்த தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக தர மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாக தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.